மேல்படிப்பு

“போறாளே பொண்ணுத்தாயி, பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறும் தந்த மண்ணவிட்டு”

 கண்ணீர் மட்டும் தான் இல்லை, அதுவும் அப்பா மனசு காயப்படக்கூடாது என்பதற்காக. தனது ஊரிலிருந்து சென்னைக்கு மேல்படிப்புக்காக செல்லும் முதல் பெண், பொன்னி. அவளை வழியனுப்ப ஊரே திரண்டிருந்தது. வண்டியும் வந்தது.

“ஏம்மா, பொன்னி, போனவுடனையே கடுதாசி போடு. என்ன புரிஞ்சுதா? ஒன் மாமங்காரர் ஹாஸ்டல்ல ரூம் போட்டு வச்சிருப்பான். நீ கவலப்படாம போ” – அப்பா, எப்போதும் போல தைரியம் கூறினார்.

“ஏ பொண்ணு, உனக்காக வண்டி நிக்காது. சீக்கிரம் ஏறு”; கண்டக்டர் அவசரப்படுத்த, சென்னை வண்டியில் ஏறினாள் பொன்னி. பேரூந்து இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழி தன் உலகத்தைப் பார்த்தாள். கண்ணீர் கலந்த புன்னகையுடன் நின்றிருந்தார், அப்பா.

பேரூந்து புறப்பட்டது.

இருக்கையில் சாய்ந்து விட்டத்தை பார்த்தாள். வெள்ளந்தி மனிதர்களும் மண்வாசம் மணக்கும் திண்ணையும், தென்னந் தோப்பும், கன்றீனும் பசுவும், துள்ளித்திரியும் ஆட்டுக்குட்டிகளும், பொன்னியின் கண் முன் தோன்றின. பொங்கும் கண்ணீரை மறைக்க கண்களை மூடிக்கொண்டாள். நினைவுகளுடன் தூக்கமும் அலை மோதியது.

“ஏ பொண்ணு, சென்னை வந்துருச்சு, எறங்கு” கணீரென ஒலித்தது கண்டக்டரின் குரல். திடுக்கிட்டு எழுந்தாள் பொன்னி. வண்டிகளின் ஹார்ன் சத்தம் காதை கிழித்தது. ஜன்னலின் வழி, தெரிந்தது புகை மூட்டம் மட்டுமே. வண்டியில் இருந்து இறங்கினாள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணிலடங்காத பஸ் வண்டிகள். மக்கள் கூட்டமும் அலைமோதியது. அவ்வளவு ஜனங்களை ஓரே இடத்தில் பார்த்ததே இல்லை. கிராமத்தில் பெண்கள் நெல் மூட்டைகளை சுமந்து பார்த்திருக்கிறாள்; ஆனால் இந்த ஊரில், மக்கள் இவ்வளவு துணிமூட்டைகளை சுமந்து எங்கு செல்கின்றனர்? புரியவில்லை.

“சீக்கிரம் வாங்க, பஸ் கிளம்பிடப்போவுது”

“வாங்க, வாங்க, சீக்கிரம்…”; பொன்னியை தள்ளியபடி, ஒரு பையன் வண்டியில் ஏறினான். இல்லை, இல்லை, பையன் இல்லை; பொண்ணு! அவளை ஒரு கல்லூரிப் பட்டாளமே பின்தொடர்ந்தது.

இதையெல்லாம் பார்க்க முடியவில்லை. சற்று தள்ளி வந்தாள், பொன்னி. வரிசையாக நின்றன முச்சக்கர வண்டிகள்.

“எங்க போவனும்?”

தன் பையிலிருந்து ஒரு துண்டை எடுத்து ஆட்டோகாரரிடம் குடுத்தாள். வண்டியினுள் ஏறிக்கொண்டாள். கிளம்பியது வண்டி.

புதுமையான சென்னை மாநகரைப் பற்றி மேலும் அறிய, வண்டியிலிருந்து ஆர்வத்துடன் எட்டிப்பார்த்தாள். வேகமாக வந்த ஒரு இருசக்கர வண்டி, இவர்களை முந்திக்கொண்டு சென்றது. நூல் இழையில் தப்பியது பொன்னியின் தலை.

“அட, கைய காலை வச்சுக்கிடு சும்மா இருமா. உசிர விட்ர போற” – எரிந்து விழுந்தார் ஆட்டோகாரர்.

பயந்துவிட்டாள் பொன்னி. ‘என்ன இது, கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுறாங்களே’.

அதன் பின் அவள் வெளியில் எட்டிப் பார்க்கவே இல்லை. இருக்கையை இறுக்கப் பிடித்துக்கொண்டே வேடிக்கைப் பார்த்தாள். நிற்கக்கூட நேரம் இல்லாமல் எதிர்திசையில் ஓடிக்கொண்டிடுந்த சென்னை வாசிகளை கவனித்தாள். ஆண்களும் பெண்களும் வித்தியாசம் இல்லாமல் கும்பல் கும்பலாக சுற்றிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் குளித்துவிட்டது போல் தலைவிரி கோலத்தில் திரிந்தனர் பெண்கள்.

இவர்களைப் பார்த்தால் ஆத்தா என்ன கூறுவாள்?

“என்னங்கடி, எழவா வுளுந்துருச்சு? இப்படி திரியுறீங்க. ஒழுங்கா எண்ண வச்சு இழுத்து பிண்ணுங்கடி!”; ஆத்தாவின் நினைவு பொன்னியின் உதட்டில் புன்னகை பூக்க வைத்தது.

“இந்தாமா, நீ சொன்ன இடம் இதுதான், இறங்கு”

“எவ்ளோ, அன்னா?”

“70 ரூபா”

திடுக்கிட்டாள். “அவ்வளவா?” அது இரண்டு நெல் மூட்டைகளின் விலையாச்சே!

“இதல்லாம் ரொம்ப கம்மி, வேற எவனா இருந்தா இன்னும் அதிகமா கேட்டிருப்பான்.”

பணம் குடுத்தாள். “நன்றி”

அவள் நன்றிக்கு பதிலாக கிடைத்தது பெரும் புகைமூட்டம். அவள் நின்றுகொண்டிருந்த கட்டிடத்தைப் பார்த்தாள். Women’s Hostel. உள்ளே சென்றாள்.

“Yes, what can I do for you?” – ஆங்கிலத்தில் கேட்ட ரிசப்ஷனிஸ்ட்டிடம் தன் பெயரை கூறினாள்.

“Yes, your room number is 24″

“நன்றி”

பதில் இல்லை.

தனது அறைக்கு சென்றாள். கதவை தாழிட்டுக் கொண்டாள். கட்டிலில் அமர்ந்தாள்.

“அவ்வளவு பெருசா சொன்னாங்களே, இதுதான் சென்னையா?”

X–X

How does that make you feel?